விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி ரூபின்ஷா. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

அலெக்ஸ் வீட்டில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அலெக்சின் மனைவி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளதால் அவரது வீட்டில் சோதனை செய்வதற்காக அனுமதி வேண்டி கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அலெக்ஸ் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கெயில் ஆண்டனி(வயது22), அர்னால்டு ஆண்டனி(23), அருண்குமார்(21), பால்சாமி(23) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் 4 பேரும் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இங்கு வந்து பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் கட்டிலுக்கு அடியில் சோதனை செய்தபோது அங்கு 10-க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024