பூஜா கேத்கர் மாற்றுத் திறனாளி இல்லை: கல்லூரியில் அளித்த மருத்துவச் சான்று!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பூஜா கேத்கர் மாற்றுத் திறனாளி இல்லை: கல்லூரியில் அளித்த மருத்துவச் சான்று!தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேருவதற்காக 2007 இல் பூஜா அளித்த சான்றிதழ்.கல்லூரியில் அளித்த மருத்துவச் சான்று

ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், எம்பிபிஎஸ் படிப்புக்காக கல்லூரியில் சமர்பித்த மருத்துவ சான்றிதழில், தனக்கு எவ்வித குறைபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பெரிய அளவிலான பார்வை குறைபாடு அல்லது செவித்திறன் குறைபாடு எதுவும் இல்லை என்று பூஜா அளித்த மருத்துவ சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பூஜா மீது புகார் எழுந்தது.

இதனை விசாரிக்க மத்திய பணியாளர் அமைச்சகம், ஒருநபர் குழு அமைத்து விசாரணை தொடங்கியுள்ள நிலையில், பூஜா எம்பிபிஎஸ் படிப்பதற்காக கல்லூரிக்கு அளிக்கப்பட்ட மருத்துவ தகுதிச் சான்றிதழ் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக 2007ஆம் ஆண்டு பூஜா அளித்த மருத்துவ தகுதிச் சான்றிதழில், அவர் முழு உடற் தகுதியுடன் இருப்பதாகவும், எவ்வித குறைபாடுகளும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் உறுதி அளித்துள்ளார்.

ஆனால், யுபிஎஸ்சிக்கு பூஜா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு பார்வை குறைபாடு இருப்பதாக தெரிவித்து, அந்த இடஒதுக்கீட்டை பயன்படுத்தியுள்ளார்.

அவரின் பார்வை குறைபாட்டை சரிபார்க்க, 2022இல் ஆறு முறை மருத்துவப் பரிசோதனைக்கு அழைப்பு விடுத்தும் அவர் தவறவிட்டுள்ளார். பின்னர், 8 மாதங்களுக்கு பிறகு தனியார் மருத்துவ மையத்தில் இருந்து சான்றிதழ் பெற்று சமர்பித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் 2020 மற்றும் 2023 இல் பூஜா தாக்கல் செய்த விண்ணப்பத்தில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு டாக்டர். கேத்கா் பூஜா திலிப் ராய் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், 2023 இல் சமர்பித்த விண்ணப்பத்தில் தாய் பெயரை சேர்த்ததுடன் தந்தை பெயரிலும் திருத்தங்கள் செய்து பூஜா மனோரமா திலீப் கேத்கா் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பெயருக்கு முன்பிருந்த டாக்டர் பட்டத்தையும் நீக்கியுள்ளார்.

மேலும், 2020 ஆம் ஆண்டில் 30 வயது எனக் குறிப்பிட்டிருந்த பூஜா, 2023 ஆம் ஆண்டு விண்ணப்பத்தில் 31 வயது எனத் தெரிவித்துள்ளார்.

புணே உதவி ஆட்சியராக இருந்த பூஜா, பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இரு வாரங்களில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பூஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You may also like

© RajTamil Network – 2024