Tuesday, September 24, 2024

கவிஞரின் வீட்டில் திருடியதை நினைத்து வருந்திய திருடன்: மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த வினோதம்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மும்பை,

திருடன் ஒருவன் பிரபல கவிஞர் வீட்டில் திருடியதை நினைத்து மனம் வருந்தி, பொருட்களை திரும்ப கொண்டு வந்து வைத்ததுடன், மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற நூதன சம்பவம் நடந்து உள்ளது.

ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் சமீபத்தில் திருட்டு ஆசாமி ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அப்போது ஒரு வீடு சில நாட்களாக பூட்டிக் கிடப்பதை கவனித்தார். நைசாக பூட்டை உடைத்த ஆசாமி, உள்ளே புகுந்து எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார். மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்தார்.

அப்போது வீட்டில் பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருப்பதை பார்த்தார். அப்போது தான் அது பிரபல கவிஞரின் வீடு என்பது திருட்டு ஆசாமிக்கு தெரியவந்தது.

கவிஞர் நாராயண் சுர்வே அடிமட்டத்தில் இருந்து எழுத்தால் உயர்ந்தவர் ஆவார். அவர் மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்தவர். வீட்டுவேலை, ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை, குழந்தை காப்பாளர், நாய் பராமரிப்பாளர், பால் டெலிவிரி செய்பவர், சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து பின்னாட்களில் பிரபல எழுத்தாளர், கவிஞராக மாறியவர். அவரது கவிதைகள் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை தெளிவாக சித்தரித்தன.

நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது. பிரபல கவிஞரின் வீட்டில் திருடி விட்டோமே… என்ற குற்ற உணர்ச்சி அவரது மனதை உறுத்தியது.

கவிஞரின் வீட்டில் திருடிய டி.வி. உள்ளிட்ட பொருட்களை அந்ததிருடர் மூட்டை கட்டி மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். மேலும் வீட்டில் ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிசென்றார்.

அதில், ''மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்'' என குறிப்பிட்டு இருந்தார்.

கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் காலமானார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 10 நாட்களாக விராரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் திருடன் எழுதி வைத்து சென்ற மன்னிப்பு கடிதத்தை பார்த்தனர். திருடனின் செயலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் திருட்டு செயலை ஏற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டி.வி. உள்ளிட்ட பொருட்களில் உள்ள கைரேகையை சேகரித்து கவிஞரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடனை அடையாளம் காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

திருடன் ஒருவர் கவிஞரின் வீட்டில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024