Wednesday, October 30, 2024

போதை மாத்திரைகளுடன் துணை நடிகை உள்பட 5 பேர் கோவையில் அதிரடி கைது

by rajtamil
0 comment 37 views
A+A-
Reset

கடந்த மாதம் உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்த கென்யா நாட்டை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்த துணை நடிகை, நடிகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகரில் 100-க்கும் மேலான கல்லூரிகள் உள்ளதால், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது. போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்தாலும் போதை மருந்து விற்பனை கும்பலை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதை மருந்துக்காக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

கடந்த மாதம் உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்த கென்யா நாட்டை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் தொடர்புடைய பெங்களூரு ஆசாமிகளை பிடிக்கவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரிடம் சோதனை நடத்தினர். இதில் 5 பேர் கும்பலிடம் 1 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 200 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த யாசிக் இலாஹி (வயது 26), போளுவாம்பட்டி பகுதியை சேர்ந்த மரியா (31), கரும்புக்கடை சாரமேடு திப்புநகரை சேர்ந்த முஜிப் ரகுமான் (27), ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற பூச்சி கிருஷ்ணன்(24), சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சினேகாஸ்ரீ(31) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இவர்களில் மரியா என்பவர் சினிமா துணை நடிகையாகவும், யாசிக் இலாஹி துணை நடிகராகவும் உள்ளனர். கைதான 5 பேரிடம் நடத்திய விசாரணையில் போதை மருந்து கடத்தலில் கோவையை சேர்ந்த அப்துல் கலாம், ஆசிப் ஷெரீப், ரிஸ்வான், வட மாநிலத்தை சேர்ந்த சச்சின் ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான கும்பல் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து அதனை போதை மாத்திரைகளாக கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் கஞ்சா கும்பலுடனும் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் மூலம் கஞ்சா பெற்று விற்பனை செய்துள்ளனர்.

எனவே கஞ்சா கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கோவையில் கஞ்சா, போதை மாத்திரைகளுடன் துணை நடிகை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024