ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு திமுகவில் இணைந்து கொள்ளலாம் – அண்ணாமலை காட்டம்

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பா.ஜனதாவுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா ஜனதா தலைவர் அண்ணாமலை, 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில் கூறியிருப்பதாவது:-

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு, முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினிடம் அறிக்கை வழங்கியது. அதில், கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எனவே, பா ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும் இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.

மாணவர்கள், நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், புனித கயிற்றை கையில் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து மத மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் பரிந்துரையை, இந்து சமயத்தின் அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடிக்கிறது. தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நூலகம், அறநெறி குறித்து பா.ஜனதாவுக்கு என்ன தெரியும் என்று பேசியிருக்கிறார்.

நீதிபதி சந்துரு குறிப்பிட்ட எரிந்துபோன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்திய புத்தகங்களுக்கான பிரத்யேக பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16 ஆயிரம் புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான். டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கும் தி மு க அரசின் குழுவில் இருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாசாரம் குறித்தெல்லாம் சந்துரு எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். எதிர்ப்புகள் அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தான். அதற்கு பதிலளிக்க வேண்டியது தமிழக அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல.

அரசியல் பேச வேண்டும் என்றால் சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், தி மு கவின் கொள்கைகளை குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024