ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அரசியல் பேச விரும்பினால் தி.மு.க.வில் இணைந்து கொள்ளலாம் – அண்ணாமலை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஜனநாயகத்தில் அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் பணி என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழக அரசு சார்பில், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி, முன்னாள் நீதிபதி சந்துரு என்பவர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை, முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு, அதில் உள்ள பரிந்துரைகள் குறித்த விவரங்கள், ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகள், பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதவை. மாணவ சமுதாயத்தினரிடையே வேற்றுமையை விதைப்பவை. எனவே. பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சமூக அமைப்புகளும், இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த குறிப்பிட்ட அம்சங்களுக்கு, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். தமிழக பா.ஜ.க. சார்பில், கடந்த ஜூன் 19 அன்று, ஊடகவியலாளர்கள் சந்திப்பில், இந்த அறிக்கையில் உள்ள ஏற்றுக் கொள்ள முடியாத பரிந்துரைகள் குறித்துப் பேசியிருந்தோம்.

குறிப்பாக, கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பரிந்துரை. இந்த சமூகங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரின் கல்வி குறித்தோ, இத்தனை ஆண்டுகளில், அவர்களின் சமூக முன்னேற்றம் குறித்தோ எந்த ஆய்வு முடிவுகளும் இல்லாமல், எப்படி இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியும்? அந்தந்த பகுதிகளில் பெரும்பான்மையினராக இருக்கும் சமூக ஆசிரியர்களுக்கு, அந்த பள்ளிகளில் உயர் பதவிகள் மறுக்கப்படுவது என்ற ஒரு பரிந்துரை. கல்வியின் பொற்காலமான பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்து இத்தனை ஆண்டுகளாக ஆசிரியப் பெருமக்கள் மீது ஏற்படாத இந்த சந்தேகம், இப்போது ஏன் வருகிறது?

பெயரின் முதல் எழுத்து வரிசைப்படி, மாணவர்களை அமர வைப்பது, சமூக நீதி மாணவர் குழு என்று ஒன்றை உருவாக்குவது என்ற நகைச்சுவைப் பரிந்துரைகள். பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் எல்லாம், ஆளுங்கட்சியின் குழு தலையிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மாணவர்கள், நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பதையும், புனித கயிற்றை கையில் கட்டுவதையும் தடுப்பது என்ற இந்து மத மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் பரிந்துரையை, இந்து சமயத்தின் அடையாள அழிப்பாகத்தான் பார்க்க முடியுமே தவிர வேறு எந்தக் காரணம் கூறினாலும், அது தி.மு.க.வின் நாடகமே.

பள்ளிகளில், மாணவர் தேர்தல் நடத்துவது என ஒரு ஆபத்தான பரிந்துரை. கல்லூரித் தேர்தல்களில் புகுந்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், மாணவ சமுதாயத்தைப் பாழ்படுத்தியது போதாதா? உங்கள் அரசியல் லாபத்துக்காக, பள்ளி மாணவர்களையும் பலியிட வேண்டுமா? எனவேதான், கடந்த ஜூலை 6 அன்று நடந்த எங்களது செயற்குழு கூட்டத்தில், நமது நாட்டின், நமது சமூகத்தின் அடையாளங்களை, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் இந்த முன்னாள் நீதிபதி சந்துரு அறிக்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தோம்.

இதனால் சந்துரு வருத்தப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. சமீபத்தில் ஒரு விழாவில், இந்த அறிக்கை குறித்துப் பேசுகையில், நூலகம், அறநெறி குறித்தெல்லாம் பேசி, இவற்றைப் பற்றி பா.ஜ.க.வுக்கு என்ன தெரியும் என்று கூறியிருக்கிறார். சந்துரு குறிப்பிட்ட, எரிந்து போன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேகப் பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16,000 புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான். அதே யாழ்ப்பாணத்தில், சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கலாச்சார மையம் அமைத்ததும், பிரதமர் மோடி அரசுதான். தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் தி.மு.க. அரசின் குழுவில் இருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்தெல்லாம் சந்துரு, எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம் என்று முதலில் கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒரு நபர் குழு இதர குழு எனப் பல குழுக்களில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் முன்னாள் நீதிபதி சந்துருவால், அவர் அளித்திருக்கும் அறிக்கைக்கு வந்திருக்கும் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. சந்துரு அவர்களே, இங்கே எதிர்ப்பு தெரிவித்திருப்பது, தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயத்தைப் பாதிக்கும்படியான, அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தானே தவிர, நீங்கள் எழுதிய தொடர்கதைக்கோ, நாவலுக்கோ அல்ல. அதற்குப் பதிலளிக்க வேண்டியது தமிழக அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல.

தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்னர் ஏன் மாணவ சமுதாயத்தினரிடையே இது போன்ற சாதியப் பிரிவினைகள் பெருமளவில் இல்லை என்பதுதான் சந்துரு அறிக்கையின் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கேள்வியை முன்வைக்க, பாரபட்சமில்லாத நபராக இருந்திருக்க வேண்டும். அறிக்கையின் பரிந்துரை எண் 19 (c) யில், காவிமயமாக்குதல் (saffronization) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கும்போதே, உங்கள் அரசியல் நிலைப்பாடும், இந்த அறிக்கையின் நோக்கமும் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அறிக்கை அளித்ததோடு உங்கள் பணி நிறைவடைந்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் பணி. தி.மு.க.வின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், சந்துரு அவர்கள், அதிகாரபூர்வமாக தி.மு.க.வில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், தி.மு.க.வின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024