Sunday, September 22, 2024

சவுக்கு சங்கர் கைது விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

புதுடெல்லி,

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் ஏ.கமலா சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அதில், ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஏ.அமானுல்லா அடங்கிய அமர்வு கடந்த 15-ம் தேதி விசாரித்தது.

அப்போது சவுக்கு சங்கரால் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?, குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன்?, பொது அமைதி எங்கு வருகிறது? உள்ளிட்ட கேள்விகளை தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை உறுதி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் சென்னை போலீஸ் கமிஷனர் சவுக்கு சங்கருக்கு எதிராக கடந்த மே 12-ம் தேதி பிறப்பித்த தடுப்புக்காவல் ஆணையை இதன்மூலம் உறுதிப்படுத்தி, அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாளிலிருந்து 12 மாத கால அளவிற்கு தடுப்புக்காவலில் வைக்க ஆணையிடப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்டில் இது தொடர்பான விசாரணை நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசு சவுக்கு சங்கரின் குண்டர் தடுப்புக்காவல் ஆணையை உறுதி செய்து கடந்த 16-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் ஆங்கில மொழியாக்க நகலும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024