Tuesday, September 24, 2024

போராட்டங்கள்! பார்சிலோனாவும் திருவண்ணாமலையும்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

போராட்டங்கள்! பார்சிலோனாவும் திருவண்ணாமலையும்பார்சிலோனாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான போராட்டங்களும் திருவண்ணாமலை நிலைமையும் பற்றி…பார்சிலோனா போராட்டத்தில்…ஏ.பி.

ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டிலுள்ள சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற பார்சிலோனா நகரம் கடந்த வாரத்தில் மக்களின் மாறுபட்ட போராட்டங்களால் நெருக்கடியான விதத்தில் உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியது.

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் இருக்கும் பார்சிலோனா நகர், ஐரோப்பிய ஒன்றியத்தில் மக்கள்தொகை மிகுந்த நகர்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

பாரம்பரியச் சிறப்பும் வரலாற்றுப் பின்னணியும் கொண்டதுமான பார்சிலோனா நகரில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.

பார்சிலோனா நகரின் பொருளாதாரத்தில் சுற்றுலாதான் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் பார்சிலோனா பகுதிக்கு 2.6 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றிருக்கின்றனர்; 9.6 பில்லியன் யூரோக்களை (10.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் – சுமார் ரூ. 86 ஆயிரம் கோடி) செலவழித்துள்ளனர் என்று பார்சிலோனா சுற்றுலா கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. (2024 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களிலேயே 3.3 கோடி சுற்றுலாப் பயணிகள் பார்சிலோனாவுக்கு வந்து சென்றிருக்கின்றனர்).

உலகெங்குமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் பணம் குவிந்தபோதிலும் – ஒரு காலத்தில் உவப்பாக இருந்தாலும் – தற்போது பார்சிலோனா நகர்வாழ் உள்ளூர் மக்களைப் பொருத்தவரை இவர்களைத் தொந்தரவாகவே கருதத் தொடங்கிவிட்டனர்.

அளவுக்கதிகமான கூட்டங்கூட்டமான சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக உள்ளூர் மக்களின் வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக உயர்ந்துவிட்டன. தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.

சுற்றுலாப் பயணிகளே, வீடு திரும்புங்கள் என்று முழக்கமிட்டவாறு ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் வீதிகளில் இறங்கிப் பெரும் போராட்டங்களை நடத்தினர். விடுதிகளில், உணவகங்களில், கடற்கரைகளில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து விரட்டினர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 2,800 பேர் கலந்துகொண்டதாக உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவித்தாலும் சுற்றுலாப் பயணிகள் வருகையைக் குறைப்பதற்கான அமைப்போ 20 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக இங்குள்ள சுற்றுலா நிறுவனங்களும் விடுதிகளும் பெரிய அளவில் பணத்தைக் குவிக்கின்றன. ஆனால், உள்ளூர் மக்களின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருக்கிறது. வாழ்வதற்கே போதுமான பணம் இல்லை என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

உள்ளூர் மக்களின் தற்போதைய போராட்டத்துக்கு வீடுகளின் விலை – வாடகை உயர்வும் காலங்காலமாக வசித்துவந்த மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயமும் நேரிட்டிருப்பதுமே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் வாடகை எல்லாம் சுமார் 70 சதவிகிதம் அதிகரித்துவிட்டிருக்கிறது. இதனிடையே, வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வாடகை அனுமதிகளைப் புதுப்பிப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர நகரமைப்பு திட்டமிட்டு வருகிறது.

எல்லாம் சரி, பார்சிலோனா செய்திக்கும் தலைப்பில் இடம்பெற்றுள்ள திருவண்ணாமலைக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. தமிழ்நாட்டிலும் நிறைய பார்சிலோனாக்கள் – திருவண்ணாமலை, திருச்செந்தூர் போல – உருவாகிக் கொண்டிருக்கின்றன. உடனடியாக இல்லாவிட்டாலும் இன்னும் அதிகபட்சம் பத்தாண்டுகளில் இங்கெல்லாமும் இதேபோன்ற வெறுப்பும் போராட்டங்களும் வெடித்தால் வியப்பதற்கில்லை.

திருவண்ணாமலைக்கும் மலையடிவாரத்திலுள்ள கோவிலில் உறையும் அருள்மிகு அருணாசலேசுவரருக்கும் யாராலும் சொல்லி முடியாத சிறப்புகளும் பெருமைகளும் இருக்கின்றன.

அருணாசலேசுவரரையும் உண்ணாமுலையம்மையையும் ஒரு முறை தரிசியுங்கள், குறைகளைச் சொல்லுங்கள், மாதந்தோறும் கிரிவலம் செல்லுங்கள், இயலுமானால் சில நாள்கள் தங்கியிருந்து வழிபடுங்கள்… என்று இப்போது நிறைய பேர் சொல்கிறார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. ஒரு நாள் இருந்த நகர் மறுநாள் இல்லை என்கிற அளவுக்குக் கூட்டம் குவிகிறது.

பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்களிலிருந்தும் ஓரளவு தொலைதூர மக்களுமே கோவிலுக்கு வந்துகொண்டிருந்த நிலைமை மாறி, இப்போது எங்கெங்கிருந்தோ லட்சக்கணக்கில் மக்கள் குவிகிறார்கள். சமீப காலமாக ஆந்திரம், கேரளம், கர்நாடகத்திலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் கிரிவலம் என்ற சொல்லே திருவண்ணாலையில் அறிமுகமாகாதிருந்த நிலைமை மாறி, பௌர்ணமி நாளில் கிரிவலங்கள் எனத் தொடங்கி இப்போது எல்லா நாள்களுமே பக்தர்கள் கிரிவலங்கள் செல்லத் தொடங்கிவிட்டனர். வாரத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு வேண்டுதலுக்காக கிரிவலம் செல்லலாம் என சோதிடர்களும் பரிந்துரைக்கின்றனர்.

நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரளுவதால் அண்மைக்காலமாகத் திணறத் தொடங்கியிருக்கிறது திருவண்ணாமலை. சுமார் இரண்டு லட்சம் மக்கள் மட்டுமே இருக்கும் இந்த நகரில் இவ்வளவு பக்தர்களின் வருகையை எதிர்கொள்ளும் இடவசதிகள் இல்லை. நிறைய வீடுகள் வாடகைக்குரியவையாக மாற்றப்படுகின்றன (நாள்கணக்கிலேயே ஆயிரங்களில் வாடகை கிடைக்கும்போது யாராவது மாதக்கணக்கில் சில ஆயிரங்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுக்கொண்டிருப்பார்களா?). குடியிருப்புகளாக இருந்த வீடுகளில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ஹோம் ஸ்டே என்ற பலகைகள் தொங்கத் தொடங்கியுள்ளன. இவற்றுக்கெல்லாம் முறையான அனுமதி இருக்கிறதா, இல்லையா? தெரியாது.

பௌர்ணமி மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் – வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் படும் அவதி ஒருபுறம் என்றால் – திருவண்ணாமலை உள்ளூர் மக்களின் நிலைமை சொல்லி மாளாததாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த நாள்களில் உள்ளூர் மக்கள் தங்கள் நடமாட்டத்தைத் திட்டமிட்டுக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய நிலை.

கார்கள், வேன்கள் போன்ற வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோவிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான தெருக்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுவிடுகின்றன. உள்ளூர் மக்களே தங்கள் வாகனங்களை எங்காவது நிறுத்திவிட்டுதான் செயல்பட வேண்டும். பார்க்கிங் விஷயத்தில் எங்கேயும் வரன்முறை கிடையாது. இடம் மாறிக்கொண்டேயிருக்கும். எவ்வித ஒழுங்கும் கிடையாது.

சுமார் இரண்டு லட்சமே மக்கள்தொகை கொண்ட திருவண்ணாமலை திணறத் தொடங்கிவிட்டது. விரைவில் இதே வரிசையில் மாமல்லபுரம் போன்ற சுற்றுலா தலங்களும் திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் போன்ற சில கோவில் நகரங்களும் இடம் பெறும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

பக்தியும் வழிபாடும் சுற்றுலாக்களும் வரவேற்புக்குரியனவே. பக்தர்களுக்கும் முறையான வசதிகள் செய்துதரப்பட வேண்டும். செய்துதரப்பட்டால் மட்டுமே உள்ளூர் மக்கள் வாழ்க்கை நிலைமையும் பாதிக்கப்படாமல் – அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்கும். இல்லாவிட்டால் இங்கேயும் எதிர்காலத்தில் நிறைய பார்சிலோனாக்களை சந்திக்க வேண்டியிருக்கும்!

You may also like

© RajTamil Network – 2024