Saturday, September 28, 2024

எதிரிகள் ஒரே குழுவாக கைகோர்த்து வீழ்த்தப்பட்டாரா? – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி, பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக்கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பழிக்குப்பழி?

பிரபல ரவுடியாக இருந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை கொலை நடந்த அன்றைய இரவே போலீசார் கைது செய்தனர்.

11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் 'என்கவுண்ட்டரில்' போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே மற்ற 10 கொலையாளிகளும், போலீஸ் காவல் முடிந்து, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

திடீர் திருப்பம்

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பெண் வழக்கறிஞர் மலர்கொடி, மற்றொரு வழக்கறிஞர் ஹரிஹரன், ஏற்கனவே கைதான அருளின் உறவினர் சதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

வடசென்னை பா.ஜ.க. பெண் பிரமுகர் அஞ்சலையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக அவரையும் கைது செய்வதற்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் பயன்படுத்திய 3 கார்கள், 4 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பகீர் தகவல்கள்

இதையடுத்து போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு பகீர் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:-

இந்த வழக்கில் கைதான கொலையாளிகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள வழக்கறிஞர் மலர்கொடியின் கணவர் தோட்டம் சேகர் பிரபல அரசியல் கட்சியில் பிரசார பாடகராக இருந்துள்ளார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மலர்கொடியின் மகன் அழகுராஜாவும் கொலைவழக்கில் சிக்கி உள்ளார். மலர்கொடி சென்னை அண்ணாசாலை பகுதியில் ஆட்டோவில் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்கு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எதிரிகள் குழுவாக கைகோர்த்து…

ஆம்ஸ்ட்ராங்கை பொறுத்தவரையில் அவருக்கு பல்வேறு குழுக்கள் எதிரிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் பழி தீர்க்க ஒரு கும்பல் வெறியோடு செயல்பட்டுள்ளது.

இதனிடையே வடசென்னையில் பிரபல தாதாவாக வலம் வந்து தற்போது சிறையில் இருக்கும் ஒருவரும் இந்த கொலைக்கு பின்னணியில் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மற்றொரு புறம் வடசென்னையில் ஆம்ஸ்ட்ராங் செல்வாக்குமிக்க தலைவராக உருவாகி வந்தது வேறு ஒரு கும்பலின் கண்களை உருத்தி உள்ளது. இப்படி பல்வேறு தரப்பட்ட எதிரிகள், ஒரே குழுவாக கைக்கோர்த்து, ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தி இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

ரூ,1 கோடி கூலி பணம்

கொலையாளிகளுக்கு ரூ,50 லட்சத்தில் இருந்து ரூ,1 கோடி வரை கூலிப்பணமாக கைமாறி இருப்பதாகவும் இன்னொரு அதிர்ச்சி தகவல் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது. இந்த பண பரிமாற்றத்துக்கு அருள் முக்கிய நபராக செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவரது வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

வக்கீல் அருள், பொன்னை பாலு, திருமலை ஆகிய 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கொலை பின்னணியில் யார்-யார்?

மொத்தத்தில் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட பல்வேறு எதிரிகளை ஒருங்கிணைத்து காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு மூளையாக இருந்தது யார்? என்பது தான் தற்போது போலீஸ் விசாரணையில் முக்கிய அம்சமாக உள்ளது. இதுவரையில் விசாரணை நேர்கோட்டில் செல்வதாகவும், இந்த வழக்கில் யார்-யார்? பின்னணியில் இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024