டெஸ்ட் கிரிக்கெட்: சச்சினின் உலக சாதனையை இந்த இங்கிலாந்து வீரர் முறியடிப்பார் – மைக்கேல் வாகன்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் சாதனை பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார்

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 457 ரன்களும் எடுத்தன. 41 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக், ஜோ ரூட் இருவரும் சதம் விளாசினர்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 92.2 ஓவர்களில் 425 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 385 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 36.1 ஓவர்களில் 143 ரன்களில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் இந்த வெற்றிக்கு ஜோ ரூட் முக்கிய பங்காற்றினார். இந்த போட்டியில் அவர் அடித்த ரன்களையும் சேர்த்து இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் 11940 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் சாதனை பட்டியலில் சந்தர்பாலை (11867) முந்தியுள்ள அவர் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (15,921 ரன்கள்) உலக சாதனையை முறியடிப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் சாதனை படைப்பார். அப்படியே சச்சின் டெண்டுல்கரையும் அவர் முந்தப்போவது சிறப்பானதாக இருக்கும். பேட்டிங்கில் தற்போதைய இங்கிலாந்து அணி கடந்த காலத்தை போல் பொறுப்பற்றவர்களாக தெரியவில்லை. அவர்கள் விரைவாக ஸ்கோர் செய்கின்றனர். அவர்கள் நன்றாக விளையாடுகின்றனர். அதற்கு ரூட் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றுகிறார். 100 ரன்கள் கடந்து இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் வரை அவர் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்கூப் அடிப்பதை நான் பார்க்க விரும்புவேன்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024