2-வது டெஸ்ட்: சோயிப் பஷீர் அபார பந்துவீச்சு… வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

நாட்டிங்காம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 457 ரன்களும் எடுத்தன. 41 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் 71 ரன்களுடனும், முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஹாரி புரூக், ஜோ ரூட் இருவரும் சதம் விளாசினர். தனது 5-வது சதத்தை அடித்த புரூக் 109 ரன்னில் விக்கெட் கீப்பர் சில்வாவிடம் சிக்கினார். 32-வது சதத்தை பூர்த்தி செய்த ஜோ ரூட் 122 ரன்களில் (178 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 92.2 ஓவர்களில் 425 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 385 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 36.1 ஓவர்களில் 143 ரன்களில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024