Sunday, September 29, 2024

அமலாக்கத்துறையினர் டார்ச்சர் செய்தார்களா.? என்று கேட்ட நீதிபதி: ஜாபர் சாதிக் சொன்ன பதில்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

வரும் 29-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார்.

சென்னை,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக கூறி ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து அவரை கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கை முதலில் 3 நாட்களும், அதன்பின்பு 4 நாட்களும் என மொத்தம் 7 நாட்கள் அமலாக்கத்துறை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை ஜாபர் சாதிக் சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி, அமலாக்கத்துறையினர் தங்களை துன்புறுத்தினார்களா? என ஜாபர் சாதிக்கிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜாபர் சாதிக், 'அமலாக்கத்துறையினர் துன்புறுத்தவில்லை' என பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, 29-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024