Sunday, September 29, 2024

காவலர்களுக்கு வாகன சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ஆண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு டிவிஎஸ் ஜூபிட்டர் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை,

காவல்துறையை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு அதிநவீன வாகனங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 1 மாதத்திற்க்கு முன்பாக காவல்துறையினருக்கு 4 சக்கர வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருந்தார். அதனை தொடர்ந்து இன்று காவலர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருசக்கர வாகன சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி ரூ.74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் செயல்பாட்டை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், ஆண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு டிவிஎஸ் ஜூபிட்டர் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், "உங்கள் சொந்த இல்லம்" திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள். பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு மே 2021 முதல் தற்போதுவரை 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள். அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்களுடன் கூடிய "காவல் உதவி" செயலி தொடங்கி வைக்கப்பட்டது. காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி நடைபெற்ற பொன் விழாவில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவள் (AVAL Avoid Violence Through Awareness and Learning) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக 32 கோடியே 53 லட்சத்து 71 ஆயிரம் செலவில் 323 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2023-2024 ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில், கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு பதிலாக ரோந்துப் பணிகளை மேற்கொள்ள 200 புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 40 பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனங்கள் 39 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் செலவிலும், 45 டிவிஎஸ் ஜுப்பிட்டர் இருசக்கர வாகனங்கள் 34 லட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாய் செலவிலும், என மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் 74 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த இரு சக்கர வாகனங்கள், சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணி மேற்கொண்டு குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் (2024-2025) தமிழ்நாடு காவல்துறைக்கு 46 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 840 வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றில் சென்னை பெருநகர காவல்துறைக்கு மட்டும் 6 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் 24 வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024