இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் வென்றால் நன்றாக இருக்கும்..ஏனெனில்… – ரோவ்மன் பவல்

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

டி20 உலகக்கோப்பையை வெல்வது குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சில நெகிழ்ச்சியான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

கயானா,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்துகின்றன. இதன் முதலாவது ஆட்டம் அமெரிக்காவில் இன்று காலை நடைபெற்றது. இதில் கனடா அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-வது ஆட்டம் வெஸ்ட் இண்டீசில் இன்று இரவு 8 மணியளவில் நடைபெற உள்ளது.

அதில் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் பப்புவா நியூ கினியாவை சந்திக்கிறது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களுமே தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் கனவுடன் இன்று களமிறங்கி இருக்கிறது.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையை வெல்வது குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் சில நெகிழ்ச்சியான கருத்துகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :-

இந்த டி20 உலகக்கோப்பை தொடரை நாங்கள் 3-வது முறையாக வென்றால் நன்றாக இருக்கும். ஏனெனில் சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றும்போது அதனை எங்களது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் நினைவு கூறுவோம். அதோடு மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து அனைவருமே அறிந்திருப்பீர்கள். இந்த உலகக்கோப்பையை நாங்கள் கைப்பற்றினால் நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். அதோடு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும் அது நன்மையை கொடுக்கும். மேலும் கோப்பையை வென்று தரவரிசையில் நாங்கள் முன்னேறினால் நிச்சயம் எங்களது அணிக்கு ஸ்பான்சர்களும் கிடைப்பார்கள். அதன்மூலம் வீரர்களாகிய எங்களுக்கும் நன்மை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024