இமாச்சல பிரதேசத்தில் 28-ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மணாலி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் கொட்டித்தீர்த்த மழையால், மலைச்சரிவுகளில் இருந்து காட்டாறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் கற்கள் உருண்டு விழுந்தன. நேரம் செல்லச் செல்ல குவியல் குவியலாக கற்கள் விழுந்ததால் சுமார் 15 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

குறிப்பாக, மணாலியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் (லே-மணாலி வழித்தடம்) தண்டி என்ற பகுதிக்கும் பால்சான் பாலத்திற்கும் இடையிலான பாதை மூடப்பட்டது. லாஹவுல் ஸ்பிட்டியில் இருந்து மணாலிக்கு செல்லும் வாகனங்கள், அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் வழியாக ரோத்தங் நோக்கி திருப்பிவிடப்பட்டன.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் சாலைகளில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யும்படி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே, மாநிலத்தின் ஓரிரு இடங்களில் 28-ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதால் விளை நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. பலத்த காற்றினால் கூரை வீடுகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரகால மீட்பு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள… https://x.com/dinathanthi

You may also like

© RajTamil Network – 2024