Monday, September 23, 2024

கல்வி நிறுவனங்களில் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தையை தவிர்க்கலாம் – ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கல்வி நிறுவனங்களில் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தையை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 80 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.7.8 கோடி செலவில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.88 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.1.7 கோடி செலவில் தெரு விளக்குகள், சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் 80 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் ரூ.7.8 கோடி செலவில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளது தொடர்பான தெளிவான விவரங்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்களும் முழுமையாக இல்லை என சுட்டிக்காட்டினர். அதே போல், ரூ.1.7 கோடி செலவில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் தெரு விளக்குகள், சோலார் விளக்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளனவா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

'இப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமலே இருந்திருக்கலாம்' என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'சமூகநீதி பற்றி பேசிவரும் நிலையில், அரசு பழங்குடியினர் பள்ளி என அழைப்பது ஏன்? அரசு பள்ளி என்று மட்டும் அழைக்கலாமே?' என்று கருத்து தெரிவித்தனர்.

21-ம் நூற்றாண்டிலும் அரசு பழங்குடியினர் நல பள்ளிகள் என்று அழைப்பது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியினர் பள்ளி, கல்லூரி என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் மீண்டும் கல்வராயன் பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அரசு குழுவுடன் இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி உடன் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024