ரெயில்வே கேட்டில் 40 மாணவர்களுடன் சிக்கிய பள்ளி பஸ்: திக்.. திக்… நிமிடங்கள்

by rajtamil
Published: Updated: 0 comment 12 views
A+A-
Reset

மும்பை

மராட்டிய மாநிலம் நாக்பூர் காபர்கேடா பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் சுமார் 40 மாணவர்கள் இருந்தனர். பஸ் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் அருகே சென்றபோது சிவப்பு சிக்னல் விழுந்தது. ஆனால் கேட் மூடுவதற்குள் டிரைவர் தண்டவாளத்தை கடக்க பஸ்சை ஓட்டிச் சென்றார்.

ஆனால் பஸ் தண்டவாளத்தை கடப்பதற்கு முன், ரெயில்வே கேட் மூடியது. இதன் காரணமாக பஸ் ரெயில்வே கிராசிங்கின் நடுவில் சிக்கி கொண்டது. அந்த நேரத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிந்வாரா பகுதியில் இருந்து நாக்பூர் இத்வாரி நோக்கி பயணிகள் விரைவு ரெயில் ஒன்று வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் இருந்த மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். டிரைவர் செய்வதறியாது திகைத்தார்.

நிலைமையை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக தண்டவாளத்தில் ரெயில் வரும் பாதை நோக்கி ஓடினர். டிரைவரும் ரெயில்வே கேட்களுக்கு இடையே தண்டவாளத்தை விட்டு விலகி ஓரமாக பஸ்சை நிறுத்த முயற்சி செய்தார். மேலும் தண்டவாளத்தில் பஸ் சிக்கி கொண்டது குறித்து கேட் கீப்பர் வாக்கி டாக்கி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இந்தநிலையில் தூரத்தில் வரும் போதே தண்டவாளத்தில் அதிகளவில் மக்கள் நிற்பதை என்ஜின் டிரைவர் கவனித்தார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்த அவர் உடனடியாக ரெயிலை பிரேக் பிடித்து நிறுத்தினார். ரெயில்வே கேட்டுக்கு சிறிது தூரத்தில் ரெயில் நின்றது.

இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 40 மாணவர்கள் உயிர் தப்பினர். இதன் பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தகவல் அறிந்த போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். ரெயில்வே கேட் திறக்கப்பட்டு உடனடியாக பஸ் தண்டவாளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

சம்பவம் குறித்து காபர்கேடா போலீஸ் நிலைய அதிகாரி தானாஜி ஜாலக் கூறுகையில், "சிவப்பு சிக்னலை பார்த்த பிறகும், ரெயில்வே கேட் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும் என தெரிந்தும் டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்று உள்ளார். எனவே இந்த சம்பவத்தில் டிரைவர் மீது தான் தவறு. பள்ளி குழந்தைகளை காப்பாற்ற டிரைவர் பஸ்சை தண்டவாளத்துக்கு பக்கவாட்டில் நிறுத்தி உள்ளார்" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024