Monday, September 23, 2024

கே.ஆர்.எஸ்.அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு… 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 94 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981 கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 983 கனஅடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

இதனிடையே கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து அடைகிறது. நேற்று முன்தினம் 90 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 95.50 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து மட்டும் 1.30 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 94 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அதாவது 405 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 71வது முறையாக 100 அடியை எட்டியதை தொடர்ந்து, அணையில் விவசாயிகள் பூஜைகள் செய்து காவிரியை வழிபட்டனர்.

கடந்த 4-ந்தேதி 39.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 23 நாட்களில் 60 அடி வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை ஒரு வாரத்திற்குள் தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024