Sunday, September 22, 2024

டி.என்.பி.எல்.: சேலத்தை கடைசி ஓவரில் வீழ்த்தி கோவை திரில் வெற்றி

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

Image Courtesy : @TNPremierLeague

திண்டுக்கல்,

8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு தொடங்கியது.

இதன்படி இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவை கிங்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விஷால் வைத்யா 36 ரன்களிலும், அபிஷேக் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராஜேந்திரன் விவேக் 43 ரன்கள் சேர்த்தார். ஹரீஷ் குமார் 42 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுஜய், அரைசதத்தை நோக்கி முன்னேறிய நிலையில் 48 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஜெயராமன் சுரேஷ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக்கான் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

மறுபுறம் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், 20-வது ஓவரில், சன்னி சந்து வீசிய கடைசி பந்தை கோவை வீரர் சித்தார்த் பவுண்டரிக்கு விரட்டினார். இதன் மூலம் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலம் பந்துவீச்சாளர் பொய்யாமொழி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் குறைவான பந்துகளில் அரைசதம் கண்ட ஷாருக்கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

You may also like

© RajTamil Network – 2024