Monday, September 23, 2024

‘ரெயில்வே திட்டங்களில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது’ – செல்வப்பெருந்தகை

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

ரெயில்வே திட்டங்களில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

சென்னை,

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் பாரபட்சப் போக்கை கடைப்பிடித்து ரெயில்வே திட்டங்களில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அப்பட்டமான அரசியல் பாகுபாடு காரணமாக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கிற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ், தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன.

முன்பெல்லாம் ரெயில்வே துறைக்கென்று தனி பட்ஜெட் நீண்டகாலமாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் மூலம் எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த திட்டங்கள், எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்கிற விபரங்கள் வெளிவரும். ஆனால் ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு பொது பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டு தற்போது ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது என்கிற விபரம் தான் வெளிவந்தது. எதற்கு எவ்வளவு நிதி என்கிற விபரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது.

அதன்மூலம், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 3.49 சதவீதமாகும். ஆனால் மத்திய பிரதேசத்திற்கு ரூ.14,738 கோடியும் (8.08%), குஜராத்துக்கு ரூ. 8,743 கோடி (4.79%) உத்திர பிரதேசம் ரூ. 19,848 கோடி (10.88%), ராஜஸ்தான் ரூ.9,959 கோடி (5.46%), மகாராஷ்டிரா அதிகபட்சமாக ரூ.15,940 கோடி (8.74%) பிஹார் ரூ. 10,033 கோடி (5.50%) ஆந்திரா ரூ.9,151 கோடி (5.05%) என ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த பல ரெயில்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகம் தற்போது 32.07 என்ற அடர்த்தி அளவிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், வரி வருவாயிலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல ரெயில்வே திட்டங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படாமலும், குறைத்தும் வழங்கப்பட்டிருக்கின்றன. மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் பாரபட்சப் போக்கை கடைப்பிடித்து ரெயில்வே திட்டங்களில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

நேற்று பொது நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தற்போது ரெயில்வே திட்டங்களில் தமிழகம் எந்த அளவுக்கு பாரபட்சமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகால மக்கள் விரோத நடவடிக்கையின் காரணமாகவும், பாசிச போக்கினாலும் பா.ஜ.க.வுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் மக்கள் பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். இரு மாநில கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி அரசு நடத்திவரும் பிரதமர் மோடி தொடர்ந்து மக்களை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தி பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்வாரேயானால் அதற்குரிய பாடத்தை மக்கள் நிச்சயம் மீண்டும் புகட்டுவார்கள்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024