Saturday, September 21, 2024

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டியது

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

சேலம்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 234 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

ஒகேனக்கல் அருவிகள், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 13-வது நாளாக நீடிக்கிறது. காவிரியில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்டே வருகிறது. இதன்படி இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.34 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 107.69 அடியாகவும், நீர் இருப்பு 75.167 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024