சிறுவாபுரி முருகன் கோவிலில் 28-ம் ஆண்டு திருக்கல்யாண மகோத்சவம்

by rajtamil
0 comment 40 views
A+A-
Reset

திருக்கல்யாண மகோத்சவத்திற்கு பின்னர் மங்கள வாத்தியம், திருக்கயிலாய வாத்தியம் முழங்க சுவாமி 6 முறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் வள்ளி மணவாளனை தொடர்ந்து 6 வாரம் தரிசனம் செய்ய வேண்டும். அதன்பின் அர்ச்சனை செய்து மாலையுடன் பிரகாரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், திருமணம், பிள்ளைப்பேறு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஜூன் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று வள்ளி மணவாளன் திருக்கல்யாண மகோத்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில், 28-வது திருக்கல்யாண மகோத்சவம் இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, இன்று காலையில் வள்ளி மணவாளனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க மாங்கல்ய தாரணம் நடைபெற்றது. அதன்பின்னர் மங்கள வாத்தியம், திருக்கயிலாய வாத்தியம் முழங்க சுவாமி 6 முறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கல்யாண மகோத்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

You may also like

© RajTamil Network – 2024