டெல்லி,
தலைநகர் டெல்லியை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் கடந்த 14ம் தேதி ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பாலியல் உறவில் இருந்துள்ளனர். அதன்பின்னர், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் சண்டையாக மாறிய நிலையில் அப்பெண் போலீசாருக்கு போன் செய்து ஒரு நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
பாலியல் புகார் குறித்து தகவலறிந்த போலீசார், ஓட்டலுக்கு விரைந்து வந்து அந்த இளைஞரை கைது செய்தனர். மேலும், சம்பவம் குறித்து அப்பெண்ணிடம் கேட்டுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த இளம்பெண், இளைஞர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அப்பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் மறுநாள் காலை வாக்குமூலம் வாங்கியுள்ளார். அப்போது, இருவரும் விருப்பப்பட்டுதான் பாலியல் உறவில் இருந்ததாகவும், காதலனுடன் வாக்குவாதம் மற்றும் சண்டை ஏற்பட்டதால் அவர் ஆத்திரத்தில் போலீசாருக்கு போன் செய்து போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துவிட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இளைஞர் மீதான வழக்கு கடந்த 25ம் தேதி டெல்லி கூடுதல் அமர்வு கோர்ட்டு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் மீது இளம்பெண் போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார் என்பது வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது என கூறிய கோர்ட்டு, இளைஞருக்கு ரூ. 20 ஆயிரம் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கியது.
மேலும், விருப்பப்பட்டு பாலியல் உறவு வைத்துக்கொண்டு கருத்துவேறுபாடு ஏற்பட்டதும் இளைஞர் மீது போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம் பெண் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, நமது நாட்டில் ஆண்களுக்கும் சமமான உரிமையும், பாதுகாப்பும் அரசியலமைப்பு வழங்குகிறது. ஆனால், சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறப்பு சலுகைகளும், பெண்கள் பாதுகாப்பு சட்டங்களும் அவர்களின் உள்நோக்கங்களை திருப்திபடுத்தும் ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்றார்.