Monday, September 23, 2024

மேட்டூர் அணை நீர்மட்டம்: 11 மாவட்ட கலெக்டர்களுக்கு வெள்ள அபாய சுற்றறிக்கை

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சேலம்,

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு 1.55 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 116.36 அடியை தாண்டியுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உள்ளது.

இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு தொடர்பாக 11 மாவட்ட கலெக்டர்களுக்கு நீர்வளத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், "மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8.00 மணியளவில் 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024