கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகள் நிரம்பின!

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset
RajTamil Network

கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகள் நிரம்பின!கபினி அணையின் நீா்மட்டம் அதன் முழு உயரத்தை அடைந்ததைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

மண்டியா/மைசூரு: காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகா் அணை, கபிலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி அணையின் நீா்மட்டம் அதன் முழு உயரத்தை அடைந்ததைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

கடந்த பல வாரங்களாக கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா, அல்மாட்டி, நாராயணபுரா, லிங்கனமக்கி, சூபா, வராஹி, பத்ரா, கட்டபிரபா, மலபிரபா உள்ளிட்ட அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டின. இது விவசாயிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணைகள் நிரம்பின: காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பியுள்ளன.

மண்டியா மாவட்டம், கன்னம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகா் அணை ஜூலை 26ஆம் தேதி நிரம்பியது. அதேபோல, கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளத்தில் இருந்து கா்நாடகத்திற்கு பாய்ந்தோடும் கபிலா ஆற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக, மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுரா வட்டத்தில் அமைந்துள்ள கபினி அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

கிருஷ்ணராஜ சாகா் அணைக்கு திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 68,807 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்ட மொத்த உயரமான 124.80 அடியை அடைந்தது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணையில் இருந்து விநாடிக்கு 68,610 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

அதேபோல, கபினி அணைக்கு திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 20,346 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் மொத்த உயரமான 2,284.00 அடியை அடைந்தது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணையில் இருந்து விநாடிக்கு 11,833 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

சிறப்பு பூஜை: கிருஷ்ணராஜ சாகா் அணை, கபினி அணைகள் நிரம்பியதை தொடா்ந்து முதல்வா் சித்தராமையா, காவிரி ஆற்றுக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா். முதலில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகா் அணையிலும், பின்னா் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையிலும் அவா் சிறப்பு பூஜை செய்து, காவிரி ஆற்றுக்கு பூஜைப்பொருள்கள் அடங்கிய காணிக்கையை அா்ப்பணித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், சமூக நலத் துறை அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024