சிக்கல்களை தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாதர்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

குடைவரையில் காணப்படும் ரங்கநாதரின் திருமேனியானது 24 அடி நீளம் கொண்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிங்கவரம் ரங்கநாதர் கோவில். இது முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட குடைவரை கோவிலாகும்.

கோவில் வரலாறு

பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணு ஆட்சி செய்துகொண்டிருந்த காலகட்டம். அவரது செஞ்சி அரண்மனைக்கு அருகே எழில் மிகு மலர்வனம் ஒன்று அமைந்திருந்தது. இங்கிருந்து தினமும் அரண்மனைக்கு பூக்கள் எடுத்துச்செல்லப்படும். ஆனால் சில நாட்களாக அந்த வனத்தில் இருந்து பூக்கள் எதுவும் அரண்மனைக்கு வரவில்லை. மன்னன் என்னவென்று விசாரித்தபோது, `வராகம் ஒன்று நந்தவனத்தின் பூக்களை எல்லாம் தின்று தீர்த்துவிடுகிறது. எவ்வளவு முயன்றும் அந்த வராகத்தைப் பிடிக்கவோ, கொல்லவோ முடியவில்லை' என்று புகார் தெரிவித்தனர்.

ஒருநாள் சிம்மவிஷ்ணு, அந்த வராகத்தை பிடிக்க நந்தவனத்தில் ஒளிந்திருந்தார். அப்போது வராகம் வந்து மேயத் தொடங்கியது. உடனே, மன்னன் அதன் முன் குதித்து அதை வேலால் குத்த முயன்றான். ஆனால் அந்த வராகம் தப்பி ஓடியது. மன்னன் விடாமல் துரத்தினான். ஒருகட்டத்தில் வராகம் நந்தவனத்தைத் தாண்டி மலைமேல் ஏறத்தொடங்கியது.

மன்னனும் விடாமல் பின் தொடர்ந்தான். மலை உச்சிவரை சென்ற வராகம் அங்கே ஒரு கணம் நின்று மன்னனைத் திரும்பிப் பார்த்து மறைந்தது. மன்னன் வராகம் மறைந்த உச்சிக்குச் சென்று பார்த்தால் அங்கே பிரமாண்டமான ரங்கநாதர் திருமேனி இருந்ததாம். வந்தது சாதாரண வராகம் இல்லை என்று உணர்ந்த மன்னன் அன்று முதல் அந்த ரங்கநாதரை வழிபடத் தொடங்கினார். அந்த சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் அந்த மலையைக் குடைந்து ரங்கநாதருக்கு கோவில் அமைத்தார் என்பது வரலாறு.

ஆலய அமைப்பு

இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் உயர்ந்தோங்கிய ஊஞ்சல் மண்டபம் நம்மை இனிதே வரவேற்கிறது. மலைக்கோவிலை தரிசிக்கப் படிக்கட்டுகள் ஏறுவதற்கு முன், ஒற்றைப் பாறையில் திருமாலுக்கு உகந்த சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம், பஞ்சமுக அனுமன் ஆகிய திருவடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அவற்றை வணங்கிய பின் செங்குத்தாகக் காணப்படும் 125 படிக்கட்டுகளைக் கடந்து மேலே சென்றால், 5 நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்தை காணலாம். இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் தொன்மை வாய்ந்த குடைவரையைக் காணலாம். பாறையை குடைந்து உள்ள மண்டபத்துக்கு பின்னால் ஆதிசேஷன் மீது அனந்த சயன நிலையில் ரங்கநாதர் பள்ளிகொண்டுள்ளார். குடைவரையில் காணப்படும் ரங்கநாத பெருமாளின் திருமேனியானது 24 அடி நீளம் கொண்டது. இது திருவரங்கம் அரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாதரை விடவும் பெரியது ஆகும்.

மூலவர் வயிற்றுக்கு நேராக பிரம்மாவும், மார்பில் மகாலட்சுமியும், கீழ்பாகத்தில் பூதேவி, கருடன், ஜெயவிஜயன், நாரதர் ஆகியோரும் உள்ளனர். இந்த குடைவரையில் வலப்புறமாக ரங்கநாயகி தாயார், தனி சன்னிதியில் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். அதே அறையின் பின்புறமாக குடைவரையை ஒட்டியபடி உக்கிரமான துர்க்கை வீற்றிருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. துர்க்கை அம்மனை ஜன்னல் வழியாகவே தரிசிக்க முடியும். துர்க்கையை வயதான ஒருவரும், இளம் வயதுடைய ஒருவரும் வணங்குவது போல் அருகில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் எதிர்புறம் பலிபீடமும், கல் கொடிமரமும் காணப்படுகின்றன.

மலையில் ராஜகோபுரம், வரதராஜ பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி, சுனை நீர் குளம், வராகர் சன்னிதி ஆகியவை உள்ளன. கோவிலின் சுனை நீர் குளத்துக்கு எதிரில் அரசமரம் தலவிருட்சமாக இருக்கிறது. இந்த தலத்தில் இருக்கும் கருடர் நவபாஷாணத்தால் செய்யப்பட்டவர் என்கிறார்கள். இந்தக் கருடரை வணங்கினால் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனபயமும் அகலுமாம். இங்கு வந்து வணங்கும் பக்தர்களின் தீராத கஷ்டங்களையும், சிக்கல்களையும் ரங்கநாதர் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.

செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு, ரங்கநாதரை குலதெய்வமாக வணங்கி வந்ததாகவும், தாயார் அம்மாள் சன்னிதி அருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாகவே செஞ்சிக்கோட்டையில் இருந்து ராஜா தேசிங்கு, இந்தக் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வணங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

வழிபாடு

இக்கோவிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியும், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டுகளில் சிறப்பு பூஜையும், சித்ரா பவுர்ணமி அன்று சுவாமி வீதி உலாவும், வைகாசியில் கருட சேவையும், ஆடி மாத பவித்திர உற்சவமும், ஆடிப்பூரத்தில் ஊஞ்சல் உற்சவமும், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும், திருப்பாவாடை உற்சவமும், தை மாதம் திருப்பதியில் நடைபெறுவது போல் ரத சப்தமி உற்சவமும், காணும் பொங்கல் மற்றும் தை அமாவாசை அன்று பகலில் உற்சவமும், பங்குனியில் ராமநவமி உற்சவமும் நடக்கிறது. மேலும் சுப முகூர்த்த நாட்களில் திருமணங்களும், 60-ம் கல்யாணமும் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் ரங்கநாதரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024