இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை எப்படி எதிர்கொள்வது? – பாகிஸ்தான் வீரர்களுக்கு பாபர் அசாம் அறிவுரை

by rajtamil
Published: Updated: 0 comment 24 views
A+A-
Reset

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

நியூயார்க்,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அளித்த பேட்டியில் 'எப்போதுமே மற்ற ஆட்டங்களை விட இந்தியா- பாகிஸ்தான் மோதல் குறித்து அதிகம் பேசப்படும் என்பதை அறிவோம். உலகக் கோப்பை அட்டவணையில் இந்த ஆட்டம் தான் மாறுபட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் நிறைய உற்சாகத்தை அளிக்கிறது. உலகில் எங்கு சென்றாலும் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் குறித்து தான் பேசுவார்கள். ஒவ்வொரு ரசிகரும் இந்த ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எதிர்பார்ப்பும், இந்த போட்டி மீதான மிதமிஞ்சிய ஆவலும் கொஞ்சம் பதற்றத்தை உருவாக்குகிறது. பதற்றத்தை எப்படி சிறப்பாக கையாள்கிறீர்கள், அடிப்படை விஷயங்களில் எப்படி துல்லியமாக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதில் தான் ஒரு வீரராக உங்களை இயல்பாக வைத்திருக்க உதவும். இது மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த போட்டி. பதற்றமின்றி தொடர்ந்து அமைதியான மனநிலையில் இருந்து, உங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து உழைத்தால் எல்லாமே எளிதாகி விடும். இது தான் சக வீரர்களுக்கு வழங்கும் அறிவுரையாகும்' என்றார்.

You may also like

© RajTamil Network – 2024