Saturday, September 28, 2024

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக 2003-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது. அதையடுத்து, மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் இருந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. நம்பர் 1 காமராஜர் சாலையில் பேரணி செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், பேரணியில் பங்கேற்றவர்கள் நம்பர் 2 காந்திஜி சாலை வழியாக செல்ல முற்பட்டனர்.

அதனை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், காவல் துறையினருக்கும், விசிகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின்பேரில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதுதொடர்பாக, மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு இன்று (ஜூலை 31) விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் ஆஜராகாத தொல்.திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

மத்திய அரசின் 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த வழக்கு தொடர்பாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாததால் திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024