Saturday, September 28, 2024

வாடகைக்கு கடைகள் கட்டுவது மட்டுமே மாநகராட்சியின் பணி அல்ல

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset
RajTamil Network

வாடகைக்கு கடைகள் கட்டுவது மட்டுமே மாநகராட்சியின் பணி அல்லமதுரை வண்டியூா் கண்மாய் பகுதியில் மாநகராட்சி தரப்பில் உணவகங்கள் கட்ட தடை விதிக்கப்பட்ட நிலையில், வாடகைக்கு கடைகள் கட்டுவது மட்டுமே மாநகராட்சியின் பணி அல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

மதுரை வண்டியூா் கண்மாய் பகுதியில் மாநகராட்சி தரப்பில் உணவகங்கள் கட்ட தடை விதிக்கப்பட்ட நிலையில், வாடகைக்கு கடைகள் கட்டுவது மட்டுமே மாநகராட்சியின் பணி அல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த பொழிலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை வண்டியூா் கண்மாயை அழகுபடுத்தும் திட்டத்துக்காக கடந்தாண்டு ரூ. 50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியைப் பயன்படுத்தி பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளவும், பூங்காவுக்குள் 40 உணவுக் கடைகள் அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டது. இது விதிகளுக்கு எதிரானது என்பதோடு, கண்மாயையும் மாசுபடுத்தும்.

எனவே, மதுரை கே.கே. நகா், வண்டியூா் கண்மாய், சுந்தரம் பூங்கா பகுதிகளில் உணவகங்களை அமைக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு பொதுப் பணித் துறை நீா்வள ஆதாரத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வணிக ரீதியான கட்டுமானப் பணிகளுக்கு நாங்கள் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சென்னையில் உள்ள மிகப் பெரிய மெரீனா கடற்கரையில்கூட நிரந்தரமான உணவகங்கள் கிடையாது. ஆனால், மதுரை வண்டியூா் கண்மாயில் மாநகராட்சி விதிகளை மீறி உணவகங்கள் உள்பட வணிகக் கட்டடங்களை எப்படி கட்டுகின்றனா்?. தற்போதைய உலகமயமாக்கலால் மூச்சுவிடக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில், மாநகராட்சியானது கண்மாயை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்களைத் தொடா்ந்து கட்டி வருகிறது. இந்த நிலை தொடா்ந்தால், அனைவரும் கடுமையான உடல் நலம் பாதிக்கப்படுவா். இது மாநகராட்சி ஆணையா், மாமன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகளுக்கு தெரியாதா?. மாநகராட்சியின் செயல்பாடானது ஊருக்கு மட்டும் உபதேசம் என்பதுபோல உள்ளது.

மதுரையில் பிரபலமான உணவகங்கள் அதிகம் உள்ளன. வண்டியூா் கண்மாய்ப் பகுதியில் உணவகங்களைக் கட்டி மாசுபடுத்த வேண்டாம். யாரை திருப்திப்படுத்த மாநகராட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது?.

ஏற்கெனவே மதுரையில் வைகை ஆற்றை ஆக்கிரமித்து சாலைகள் அமைக்கப்பட்டன. பலத்த மழை பெய்து வைகையில் வெள்ளம் ஏற்படும் போதுதான் அதன் நிலை தெரியவரும். வண்டியூா் கண்மாயை அழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

வாடகைக்கு கடைகள் கட்டுவது மட்டுமே மாநகராட்சியின் பணி அல்ல. பொதுமக்களுக்குத் தேவையான நலத் திட்ட உதவிகள் வழங்குவது, வீடுகள் கட்டிக் கொடுப்பது, சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது, நீா்நிலைகளை மேம்படுத்தி பாதுகாப்பது உள்ளிட்டவைதான் மாநகராட்சியின் முக்கியப் பணியாகும்.

எனவே, வண்டியூா் கண்மாய்ப் பகுதியில் உணவகங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கண்மாயில் கட்டப்படும் கட்டுமானம் தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா், பொதுப் பணித் துறை பொறியாளா் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

You may also like

© RajTamil Network – 2024