Saturday, September 21, 2024

டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

19.5 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

திண்டுக்கல்,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ் ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா அபராஜித்துடன், ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். இதில் பாபா அபராஜித் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். ஜெகதீசன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரதோஷ் ரஞ்சன் பவுல் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். நிலைத்து நின்று அதிரடி காட்டிய பாபா அபராஜித், 72 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் அணியில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, விக்னேஷ் மற்றும் சுபோத் பட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விமல் குமார் 3 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சிவம் சிங்குடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். சிவம் சிங் 64 ரன்களும், அஸ்வின் 57 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 19.5 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் அணி, திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன் மோதுகிறது.

You may also like

© RajTamil Network – 2024