Saturday, September 28, 2024

“குற்றம் சாட்டுவதற்கு இது நேரமில்லை..” அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதில்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், "கனமழை குறித்து கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை வழங்கியது. மழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரளாவிற்கு 2 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கையை கேரள அரசு புறம் தள்ளியது ஏன்? முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால்தான் தேசிய பேரிடர் மீட்புப்படை முன்கூட்டியே அங்கு சென்றது. குஜராத்தில் சூறாவளி ஏற்பட்டபோது அது குறித்து 3 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை வழங்கினோம்.

எச்சரிக்கையை குஜராத் அரசு சீரியசாக எடுத்துக்கொண்டதால் ஒரு பசு கூட இறக்கவில்லை. இயற்கை பேரிடர் குறித்து 7 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை வழங்கும் முதன்மையான 4 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டு வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 90 சதவீதம் தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எவ்வித அரசியல் வேறுபாடும் இன்றி கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு துணை நிற்கும். தயவு செய்து மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்து பார்க்க வேண்டும்" என்று அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும், வயநாட்டில் 500 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம். செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம் சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024