Saturday, September 28, 2024

புதுச்சேரியில் பேனர் குறித்த புகார்களுக்கான வாட்ஸ் அப் எண் வாபஸ்: மக்கள் அதிருப்தி

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

புதுச்சேரியில் பேனர் குறித்த புகார்களுக்கான வாட்ஸ் அப் எண் வாபஸ்: மக்கள் அதிருப்தி

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் வைத்தால் புகாரளிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணை இரண்டு வாரத்திலேயே திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பிறந்தநாள் வருவதால் அவரது ஆதரவாளர்கள் பேனர் வைக்கத் தொடங்கியுள்ளது தான் இம்முடிவுக்கு காரணம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் பொது இடங்களில் சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகள், கட் அவுட், பேனர்கள் வைக்கப்படுகின்றன. அதில் பெரும்பாலானவை அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களால் வைக்கப்படுபவை. சில சமயங்களில் சட்டவிரோத பதாகைகளை அகற்ற முயலும்போது சில பிரிவினர் தடுத்து நிறுத்தி பிரச்சினையும் வெடிக்கிறது.பேனர் கலாச்சாரம் எல்லை மீறிப் போய், சிக்னல்கள், ரவுண்டானாவில் மக்கள் செல்வதற்கு இடையூறாகவும் பேனர்கள் வைக்கப்படுகிறது. முக்கியமாக, அரசியல்வாதிகளின் பிறந்தநாள் தொடங்கி குழந்தைகள் முதலாவது பிறந்தநாள், பணி ஓய்வு நாள் என அனைத்துக்கும் பேனர்களை வைக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி, பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க புதுவை சப்கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், ‘விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்றும் போது ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்வதை தடுப்பது தண்டனைச் சட்டம் 2023 பிரிவு 221-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். இதற்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம். புதுவை மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம். புதுவை மாவட்ட நிர்வாகம் சட்டவிரோத பதாகைகள் வைப்பதைக் கட்டுப்படுத்த உறுதிபூண்டுள்ளது.

பிறந்தநாள், திருமணம், தொடக்கவிழா, கோயில் திருவிழா, திரைப்படம், தொழில் விளம்பரங்கள் என எந்தக் காரணமாக இருந்தாலும், பொது இடங்களில் சட்டவிரோத பதாகைகள் வைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பதாகை வைப்பவர் தனி நபராக இருந்தாலும், குழுவாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் 94433 83418 என்ற எண்ணில் பேனர்களை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம். புகைப்படத்தில் தேதி, நேரம் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடப்பட வேண்டும். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சப்கலெக்டரின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு எழுந்தது. இந்நிலையில் சப்கலெக்டர் இன்று (வியாழக்கிழமை) பிறப்பித்துள்ள உத்தரவில், ‘பேனருக்கு எதிராக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தர தெரிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண் நிர்வாக காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுகிறது. இந்த எண்ணுக்கு புகார் அனுப்பவேண்டாம். குறைகள், புகார்களை சமர்பிக்க மற்ற அனைத்து வழிகளும் வழக்கம்போல் செயல்படும்’ என தெரிவித்துள்ளார்.

இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், “வரும் 4-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் வருகிறது. இதனால் நகரில் பல இடங்களில் பேனர்கள் அதிகளவில் அவரது ஆதரவாளர்களால் வைக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் புகார் தர இருந்த வாட்ஸ் அப் எண்ணை அரசு நிர்வாகம் திரும்ப பெறப்பட்டுள்ளது.” என்று குற்றம் சாட்டினர்.

You may also like

© RajTamil Network – 2024