Sunday, September 29, 2024

3 குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிட கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

3 குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயரிட கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்தியில் பெயரிடப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரிய வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களின் பெயர்களை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷிய அதிநியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு திருத்தங்களுடன் இந்த சட்டங்கள் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இந்த புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்திருப்பது சட்டவிரோதமானது என அறிவித்து, புதிய சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் எனக்கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயியான ஜீவன்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவின்படி, நாடாளுமன்றத்தின் அனைத்து குறிப்புகளும் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு முரணாக, இந்த மூன்று சட்டங்களும் இந்தியில் உள்ளன. புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை புரிந்து கொள்வதில் மட்டுமின்றி உச்சரிப்பதிலும் சிரமம் உள்ளது. ஆகவே, இந்தச் சட்டங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024