Friday, September 20, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி நீர்வரத்து: மேட்டூரிலிருந்து 1.70 லட்சம் கனஅடி வெளியேற்றம்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி நீர்வரத்து: மேட்டூரிலிருந்து 1.70 லட்சம் கனஅடி வெளியேற்றம்

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2 லட்சம் கனஅடியைக் கடந்தது. மேட்டூர் அணையிலிருந்து 2-வதுநாளாக விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் இரவுவிநாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1.65 லட்சம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.

ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் ஆற்றோரத்தில் அமைந்துள்ள வீடுகளைத் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. ஒகேனக்கல்-நாட்றாம்பாளையம் சாலையில், நாடார் கொட்டாய் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் நேற்று மாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒகேனக்கல், ஊட்டமலை பகுதிகளில் 6 அவசரகால தங்கும் முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, காவிரிக் கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணையில்… மேட்டூர் அணை ஜூலை 29-ம்தேதி முழு கொள்ளளவான 120அடியை எட்டியதைத் தொடர்ந்து, உபரி நீர் முழுவதும் 16 கண்மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 2-வது நாளாக நேற்றும் விநாடிக்கு 1.70 லட்சம்கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால்,காவிரிக் கரையில் உள்ள நாமக்கல்,ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நேற்று இரவு 1.71 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 93.48 டிஎம்சியாக இருந்தது.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு: இந்நிலையில், அணையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆக. 3-ம் தேதி (நாளை) ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தீயணைப்புத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் சங்கர் பார்வையிட்டார்.

அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூரில் இருந்து பூலாம்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பேருந்துகள், பள்ளி வாகனங்கள் ஆகியவை அனல் மின் நிலைய வளாகம் வழியாக சுற்றிச்சென்று பூலாம்பட்டி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் நீரில் மூழ்கின: கோல்நாயக்கன்பட்டி, சங்கிலிமுனியப்பன் கோயில், பொறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கிஉள்ளது. இதனால் பருத்தி, நிலக்கடை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. மக்களின் பாதுகாப்பு கருதி 14 இடங்கள் அபாயகரமான பகுதியாக கண்டறியப்பட்டு, அங்கு 56 தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024