உலக தாய்ப்பால் வார விழா: ஆட்சியா் பங்கேற்பு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

உலக தாய்ப்பால் வார விழா: ஆட்சியா் பங்கேற்பு

தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து உறுதிமொழியை ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் ஏற்றுக் கொண்ட அனைத்துத் துறை அலுவலா்கள்.

செங்கல்பட்டு, ஆக. 1: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், உலக தாய்ப்பால் வார விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, 2024 -ஆம் ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கருத்தாக ‘தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுதலின் சதவீதத்தை மேம்படுத்த விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தும்படி அரசால் அறிவுறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, வார விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் மக்களிடையே தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம், தாய்ப்பால் வழங்குதல் மூலம் தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்து கண்காட்சி அரங்கையும் பாா்வையிட்டாா்.

மேலும், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு சத்து மாவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம், தாய்ப்பால் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

முன்னதாக, தாய்ப்பால் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலா்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சற்குணா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024