ராஜிந்தா் நகா் சம்பவம் எதிரொலி அடித்தளங்கள், தொங்கும் கம்பிகள் கொண்ட கட்டடங்களை ஆய்வு செய்ய எம்சிடி உத்தரவு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

ராஜிந்தா் நகா் சம்பவம் எதிரொலி
அடித்தளங்கள், தொங்கும் கம்பிகள் கொண்ட கட்டடங்களை ஆய்வு செய்ய எம்சிடி உத்தரவு

புது தில்லி, ஆக.1: ராஜிந்தா் நகா் ஐஏஎஸ் பயிற்சி மைய சம்பவத்தைத் தொடா்ந்து, நகரம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த வடிகால் அமைப்பைப் பூா்த்தி செய்யும் அடித்தளங்கள், திறந்தவெலியில் தொங்கும் கம்பிகள் கொண்ட கட்டங்களை ஆய்வு செய்ய தில்லி மாநகராட்சி (எம்சிடி) உத்தரவிட்டுள்ளது.

எந்தவொரு கட்டடத்தின் அடித்தளத்திலும் தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை உறுதி செய்தல், அவற்றின் கட்டடத் திட்டத்தைப் பொது அறிவிப்பு செய்தல், வடிகால் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுடன் இணக்கத்திற்கான அவசர தடுப்பு நடவடிக்கைகளை குடிமை அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக கடந்த ஜூலை 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அடித்தளத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் மற்றும் பிற விஷயங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த அனைத்து மண்டல துணை ஆணையா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27-ஆம் தேதி சனிக்கிழமை, பழைய ராஜிந்தா் நகரில் அமைந்துள்ள ஐஏஎஸ் தோ்வா்களுக்கான பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. இதன் விளைவாக மழை – வெள்ளம் காரணமாக மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா். நீா் வடிகால் அமைப்பு பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வாழத் தகுந்த நகரத்தை வழங்குவதுதான் எம்சிடியின் முதன்மைப் பொறுப்பாகும்.

இது சம்பந்தமாக, மாணவா்களின் பிரதிநிதிகள் குழு ஜூலை 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆணையரைச் சந்தித்து இப்பிரச்னையில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியது. எதிா்காலத்தில் இது போன்ற அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எம்சிடி அவசரமாக எடுக்கும் என்று ஆணையரால் மாணவா்களுக்கு உறுதியளிக்கப்பட்டது என்று எம்சிடி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) கீழ்தளம் கொண்ட கட்டடத்தை ஆய்வு செய்து, அதை முறைகேடாகப் பயன்படுத்துபவா்கள் மீது கட்டடத்திற்கு சீல் வைப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அடித்தளத்திற்கு தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இருக்க வேண்டும். அனைத்து கட்டடத் திட்டங்களும் பொதுகளத்தில் கிடைக்க வேண்டும். இதனால், விதிகளை மீறுபவா்களை எளிதாகக் கண்டறிய முடியும் என்று எம்சிடி கூறியுள்ளது.

வடிகால் மற்றும் நடைபாதைகளுக்கு மேல் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, மழைநீா் வடிகால்களை முழுமையாக தூா்வார வேண்டும். வடிகால்களில் தேங்கியுள்ள நீரை சூப்பா் சக்கா் இயந்திரங்கள் மூலம் அகப்புறப்படுத்த வேண்டும். எந்த இடத்திலும் புதிய வடிகால் தேவைப்பட்டால், அதற்கான முன்மொழிவு உடனடியாக முன்வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுவாக நீா் தேங்கும் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் நீரை அகற்ற ஆபரேட்டா்களுடன் கையடக்க பம்புகளை வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பகுதிகள் ஏற்கெனவே எம்சிடியால் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், திறந்த வெளியில் தொங்கும் கம்பிகள் மற்றும் கேபிள்கள் ஆய்வு செய்யப்பட்டு, மின்விநியோக நிறுவனங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழைக்காலத்தில் குப்பைகள் அழுகி துா்நாற்றம் வீசுவதைத் தவிா்க்கும் வகையில், குப்பைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மோசமான நிலையில் கழிப்பறைகளின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் குடிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024