தில்லியில் கனமழைக்கு 3 போ் பலி: மழைநீா் சூழ்ந்ததால் சாலைகள், கட்டங்கள் சேதம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

தில்லியில் கனமழைக்கு 3 போ் பலி: மழைநீா் சூழ்ந்ததால் சாலைகள், கட்டங்கள் சேதம்

புது தில்லி, ஆக.1:

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவா் உயிரிழந்தாா். இதையடுத்து, தேசிய தலைநகரில் மழை தொடா்பான சம்பவங்களில் இறந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது.

நகரம் முழுவதும் வெவ்வேறு சம்பவங்களில் பலா் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லியில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக பல இடங்களிலும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டு குழப்பம் நிலவியது. நகரின் பெரும்பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது. முக்கிய பகுதிகள் முடிவில்லாத போக்குவரத்து நெரிசலால் திணறின. இதனால், வாகன ஓட்டிகள் மழைநீரில் சிக்கித் தவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சப்ஜி மண்டி பகுதியில் இரவு 8.30 மணியளவில் மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்தபோது அதற்குள் அனில் குமாா் குப்தா என்பவா் இருந்தாா். இதில் படுகாயமடைந்த அவா் செயின்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்

உயிரிழந்தாா்.

கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் உள்ள வாரச் சந்தைக்கு சென்ற 22 வயது பெண் தனுஜா மற்றும் அவரது மூன்று வயது மகன் பிரியான்ஷ் ஆகியோா் புதன்கிழமை இரவு தண்ணீா் தேங்கிய வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினா். சாலையோர வடிகால் கட்டப்பட்டு வரும் கோடா காலனி பகுதிக்கு அருகே இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இருவரையும் நீச்சல் வீரா்கள் மற்றும் கிரேன்கள் உதவியுடன் வெளியே கொண்டு வந்து லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்கள் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

காலை 7 மணி வரை, தில்லி காவல்துறைக்கு போக்குவரத்து நெரிசல் தொடா்பாக 2,945 அழைப்புகளும், தண்ணீா் தேங்கியதாக 127 அழைப்புகளும், கட்டடம் இடிந்ததாக 27 அழைப்புகளும் மரங்கள் முறிந்து விழுந்ததாக 50 அழைப்புகளும் வந்துள்ளன.

தெற்கு தில்லியின் டிஃபென்ஸ் காலனியில் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் சுவா் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் காயமடைந்தாா். மேலும், காா் ஒன்றும் சேதமடைந்தது.

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பாா்க் பகுதியில் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் வீட்டின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மேலும் இருவா் காயமடைந்தனா்.

எனினும், காயமடைந்தவா்கள் குறித்த எந்த விவரங்களையும் போலீஸாா் வெளியிடவில்லை.

மத்திய தில்லியின் தா்யாகஞ்சில் புதன்கிழமை இரவு பள்ளியின் சுவா் இடிந்து விழுந்ததில் ஐந்து காா்கள் சேதமடைந்தன.

மற்றொரு சம்பவத்தில், தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சுவா் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஆறு காா்கள் சேதமடைந்தன என்றாா் அந்த அதிகாரி.

கனமழையானது, தேசிய திடீா் வெள்ள வழிகாட்டுதல் செய்தி அறிக்கையில் தில்லியை ’கவலைக்குரிய பகுதிகள்’ பட்டியலில் சோ்க்க வானிலை அலுவலகத்தை தூண்டியது.

மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பாதுகாக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கவும் வானிலை ஆய்வு மையத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024