பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக உள்ள நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (எம்பிசி) வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஆணையத்துக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பராக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் முதன்மைச் செயலர் விஜயராஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள அனைத்து சமுதாயத்தினர் தொடர்பான தரவுகள் தேவையான அளவு கிடைக்கப்பெறாததால் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பணிகளை முடித்து 11.7.2024-க்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டிருப்பதால் ஓராண்டு அவகாசம் அளிக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று உள்இடஒதுக்கீடு பணிகளை முடிப்பதற்காக அந்த ஆணையத்துக்கு 1.7.2024-லிருந்து ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024