Monday, September 23, 2024

செப்.1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுமென அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நெல் கொள்முதல் தொடர்பாக அமைச்சர் சக்கரபானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2002-2003 காரிப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நெல் விவசாயிகள் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி அனுமதி பெற்றுத்தந்ததால் 2022-2023 காரிப் பருவத்திலிருந்து செப்டம்பர் 1-ந்தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

2023 – 24 காரிப் பருவத்தில் 31.07.2024 வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடமிருந்து 33,24,166 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 7,277.77 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2024-2025 காரிப் பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 130/- சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2450/- என்ற விலையிலும் பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2300/- உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 105/- சேர்த்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2405/- என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்குத் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024