திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சென்னை,

சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழக மாணவர்களின் அறிவாற்றல் தேசத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே பெருமை. ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மனதார வாழ்த்துகிறேன். உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன்றாக உள்ளது. தமிழக அரசின் பிரதிநிதிகளாக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் சாரை சாரையாக சேர்ந்து வருகிறார்கள். திமுக ஆட்சியில் 2022ம் ஆண்டு 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள். 2023-ம் ஆண்டு 274 மாணவர்களும், இந்தாண்டு 447 மாணவர்கள் என இரு மடங்காக அதிகரித்துள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17% அதிகரித்துள்ளது.

புதுமைப் பெண் திட்டத்தின் பயனாக உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது. தமிழ்நாடு கல்வித்துறை திமுக ஆட்சியில் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. நடப்பாண்டு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

'நான் முதல்வன்' இணையதளம் மற்றும் மணற்கேணி செயலியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ள பொதுத்தேர்வு வினாத்தாள்கள் உள்ளன. தேசிய சட்டப்பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 தமிழ்நாட்டு மாணவர்கள் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளார். வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயண செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்.

வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள், விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள்; துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாகதான் மாணவர்கள் உங்கள் நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். அவர்கள் கல்வி பயில வேண்டிய ஆதரவையும், உந்துதல்களையும் நீங்கள் வழங்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இந்த நிலைக்கு வர பல தடைகளை தாண்டி வந்து உள்ளீர்கள்; இனியும் தடைகள் வரலாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024