Saturday, September 21, 2024

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த மீனவரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகிலிருந்த மலைச்சாமி (59) என்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ராமச்சந்திரன் (64) என்ற மீனவர் கடலில் மாயமானார். முத்து முனியாண்டி (57) , மூக்கையாக ஆகிய இரண்டு மீனவர்கள் (54) இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அருகே காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பலியான மலைச்சாமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி புதன்கிழமை மாலை ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மலைச்சாமி குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. மேலும், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக மீனவர் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கை மூலம் உரிய தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தினார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய அரசின் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தியதுடன், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பாக மீனவப் பிரதிநிதி சகாயம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையின் தாக்குதலால் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்.. நடுக்கடலில் மாயமான மீனவர் ராமச்சந்திரனை தேடிக் கண்டுப்பிடித்துத் தரவேண்டும், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட முத்து முனியாண்டி, மூக்கையாக ஆகிய இருவரையும் எவ்விதமான வழக்கும் பதிவு செய்யாமல் தமிழகம் அழைத்து வர வேண்டும், மூழ்கிய படகின் உரிமையாளர் கார்த்திகேயனுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்தும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே, இரண்டாவது நாளாக இன்றும் நடுக்கடலில் மாயமாகி உள்ள மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்துப் படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024