Saturday, September 21, 2024

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு; 2-வது நாளாக கோர்ட்டில் ஆஜரான நடிகர் விஷால்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் 2-வது நாளாக கோர்ட்டில் ஆஜராகி விளக்கமளித்தார்.

சென்னை,

விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி, 'வீரமே வாகை சூடும்' என்ற படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதாக கூறி விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குறுக்கு விசாரணைக்காக நடிகர் விஷால் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, லைகா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த விஷால், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து பெற்றதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, 'நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா?' என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, 'சண்டக்கோழி- 2 படம் வெளியாவதற்கு 10 நாட்கள் முன் திருப்பி தந்துவிடுவதாக கூறி பணம் வாங்குனீர்களா?' என்ற கேள்விக்கு 'பாஸ்' என விஷால் கூறிய போது குறுக்கிட்ட நீதிபதி, 'இது போன்று 'பாஸ்' எல்லாம் சொல்லக்கூடாது. ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.

நேற்று குறுக்கு விசாரணை முடிவடையாததால், விசாரணையை இன்றைய தினத்திற்கு(ஆகஸ்ட் 2) தள்ளிவைத்த நீதிபதி, விஷால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி 2-வது நாளாக இன்று நடிகர் விஷால் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த விசாரணையின்போது, சினிமா துறையில் கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு மாதம் ஒரு சதவீதத்தில் இருந்து ஆறு சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதாக விஷால் பதிலளித்தார்.

மேலும், லைகாவிற்கு எதிராக விஷால் தொடர்ந்த ஜி.எஸ்.டி. வழக்கு உள்ளிட்டவை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணையில் நடிகர் விஷால் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக வழக்கு விசாரணையை செப்டம்பர் 9-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Original Article

You may also like

© RajTamil Network – 2024