Monday, September 23, 2024

அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைகள் நிறைந்த மாநிலமாக தி.மு.க. அரசு மாற்றியிருக்கிறது – டி.டி.வி. தினகரன்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

தமிழகத்தில் சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைகள் நிறைந்த மாநிலமாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவையில் வக்கீல், தருமபுரியில் உணவக ஊழியர், நாகப்பட்டினத்தில் ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண், புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் என கடந்த சில தினங்களில் மட்டும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன.

அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை கூலிப்படைகள் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்கள் மூலமாக திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும், பின்னர் கொலையை செய்ததாக ஒருசிலர் தாமாக முன்வந்து சரணடையும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது.

இன்று கூட திருச்சியில் காவிரி ஆற்றை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை, அப்பகுதியில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களை உட்கொண்டிருந்த கும்பல் கடுமையாக தாக்கியதில் அம்மாணவர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசால், இளைஞர்கள் பலர் போதைப் பழகத்திற்கு அடிமையாகி ஐந்தாயிரத்திற்கும், பத்தாயிரத்திற்கும் கூலிப்படைகளாக மாறி கொலை செய்யும் அளவிற்கான சூழலும் உருவாகியுள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, குற்றவாளிகளை கண்டறியவோ நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் ஆதாயத்திற்காகவும், பழிக்குப் பழி வாங்கவும் நடைபெறுவதாக கூறும் தமிழக அமைச்சர்களின் பொய்களை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.

எனவே, எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் காவல்துறையை இனியாவது சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் நாள்தோறும் அரங்கேறும் படுகொலைச் சம்பவங்கள் – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைகள் நிறைந்த மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
கோவையில் வழக்கறிஞர், தருமபுரியில் உணவக ஊழியர்,…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 3, 2024

You may also like

© RajTamil Network – 2024