ஒரே மாதத்தில் 14 பேர் உயிரிழப்பு – அதிரடி உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்டு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் ரோகினி பகுதியில் டெல்லி அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆஷா கிரண் தங்கும் விடுதியில் பல்வேறு மர்ம மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 25 பேர் உயிரிழந்திருப்பதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் (6 ஆண்கள், 8 பெண்கள்) அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆஷா கிரண் தங்கும் விடுதி சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், சுயநினைவின்மை, லேசான காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவை உயிரிழப்புக்கு காரணங்களாக தெரிவிக்கப்பட்டன. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஷா கிரண் காப்பகத்தில் உள்ள நீரின் தரத்தை பரிசோதிக்கவும், கழிவுநீர் குழாய்களின் நிலையை ஆய்வு செய்யவும் டெல்லி நீர்வளத்துறைக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தற்செயலாக இருக்க முடியாது. எண்ணிக்கையில் 14 இறப்புகள். இந்த வழக்கினை மேலோட்டமாகப் பார்த்தால், அனைத்து இறப்புகளும், நோயாளிகள் காசநோயால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டதை காட்டுகிறது. டெல்லி நீர்வளத்துறை உடனடியாக அங்குள்ள தண்ணீரின் தரம் மற்றும் கழிவுநீர் குழாய்களின் நிலை ஆகியவற்றைப் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் " என்று அவர்கள் உத்தரவிட்டனர்.

மேலும், தங்குமிடத்தின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி அரசின் சமூக நலத்துறை செயலாளருக்கு டெல்லி ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024