மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 50,000 கனஅடியாக குறைப்பு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 50,000 கனஅடியாக குறைப்பு

சேலம்/தருமபுரி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்துகுறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து, கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகளில் திறக்கப்பட்டு வரும் உபரிநீரால் மேட்டூர் அணை கடந்தஜூலை 30-ம் தேதி நிரம்பியது. தொடர்ந்து, அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர், காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 73,330கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.அணையின் சுரங்க மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி, 16 கண் மதகு வழியாக 48,500 கனஅடி என மொத்தம் 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு நேற்று மதியம் 60,273 கனஅடியாகவும், மாலையில் 50 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது. இதையடுத்து, அணையின் சுரங்க மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கனஅடி, 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 28,500 கனஅடி என மொத்தம் 50 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.02 அடியாகவும், நீர் இருப்பு 93.50 டிஎம்சி-யாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு 60ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 31 ஆயிரம் கனஅடியாகவும் குறைந்தது.

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பரித்துச் சென்ற தண்ணீரின் வேகம் நேற்று மாலையில் சற்றே தணிந்து காணப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024