விலையில்லா வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் வழங்குவதில் சுணக்கமா? – அமைச்சர் மறுப்பு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடைகள் வழங்குவதில் அரசு சுணக்கம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

சென்னை,

விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடைகள் வழங்குவதில் அரசு சுணக்கம் காட்டி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 05.08.2024 தேதியிட்ட அறிக்கையில் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒருமுறை கூட குறித்த காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக விலையில்லா வேட்டி சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கவில்லை என்றும், பள்ளி சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு 4 செட் சீருடைக்கு பதில் 3 செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றும், குறித்த காலத்திற்குள் மாணவர்களுக்கு சீருடைகளை உடனடியாக வழங்கவும். விலையில்லா வேட்டி, சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில் குறித்த நேரத்தில் வழங்கிடவும், விலையில்லா வேட்டி, சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நெசவாளர்களுக்கு மட்டும் வழங்கிடவும். இதன்மூலம் தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையின் மீதான மறுப்பறிக்கைக்கான குறிப்பு பின்வருமாறு சமர்ப்பிக்கப்படுகிறது.

பள்ளிச் சீருடை வழங்கும் திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்கும் திட்டத்தை அரசு ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவுத் திட்டத்தின் கீழுள்ள மாணாக்கர்கள் பயன்பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணாக்கர்களுக்கு 4 இணை சீருடைகள் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவியர்களுக்கு சீருடை வழங்குவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியதற்கிணங்க எந்தவிதமான தொய்வுமின்றி சீருடை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு இணை சீருடைத் துணிகள் ஜூலை மாதத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. எனினும், நடப்பாண்டில் இரண்டு இணை சீருடைத் துணிகள் முன் எப்போதும் இல்லாத வகையில் 26.06.2024-க்கு முன்னர் உற்பத்தி செய்து சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல் நெசவாளர்களின் நலனையும் வேறு எந்த அரசை விடவும் அதிகபட்ச அக்கறையுடன் அவர்களின் நலனில் தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன். எனவே உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற தேவையற்ற வதந்திகளை பரப்பும் நோக்கமுடன் செய்திகளை வெளியிடுவது பொறுப்பான அரசியல் தலைவருக்கு அழகல்ல."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024