Saturday, September 21, 2024

அவர் இப்போதும் 12 வயது சிறுவனை போன்றவர் – இளம் வயது பயிற்சியாளர் பேட்டி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கம்பீர் குணத்தில் குழந்தையாகவே இருப்பதாக சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக 2 கோப்பைகளை வென்று கொடுத்த அவர், இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்டு கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். இதனால் அவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கேப்டனாகவும் ஆலோசகராகவும் ஐபிஎல் கோப்பையையும் வென்ற காரணத்தால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அந்த வகையில் புதிய பயிற்சியாளராக வந்ததும் கவுதம் கம்பீர் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமாரை தேர்ந்தெடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் பிட்டாக இல்லை என்று சொல்லி அவரை கழற்றி விட்ட கம்பீர் துணை கேப்டனாக சுப்மன் கில்லை தேர்ந்தெடுத்தது நிறைய முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை மாற்றியது தோல்வியை கொடுத்தது. அதனால் ஆரம்பத்திலேயே கவுதம் கம்பீர் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இன்னும் கவுதம் கம்பீர் குணத்தில் குழந்தையாகவே இருப்பதாக அவருடைய இளம் வயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த வருடம் கொல்கத்தா அணியில் சுனில் நரைனை பேட்ஸ்மேனாக பயன்படுத்தி வெற்றி கண்டதைப் போன்ற மாற்றத்தை இந்திய அணியில் கம்பீர் ஏற்படுத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"கவுதம் கம்பீர் ஒரு அப்பாவி குழந்தை. இன்றும் அவர் 12 வயது சிறுவனைப் போன்றவர். அவர் திமிர்பிடித்தவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது வெற்றி பெறுவதற்கான அவரது அணுகுமுறை. போட்டி முடிந்த பின் அவரை நான் வலைப்பயிற்சியில் ஈடுபடுத்துவேன். போட்டிகளில் தோற்ற பின் அவர் அழுவார். ஆரம்ப காலங்களில் அவருக்கு தோல்வி பிடிக்கவில்லை. அவரைப் போன்றவர் அனைத்து நேரங்களிலும் சீரியஸாக இருப்பது போல் தெரியும். கம்பீர் ஆக்ரோஷமானவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

ஆனால் அன்பான இதயத்தை கொண்ட அவர் பல இளம் வீரர்களின் கெரியரை உருவாக்கியுள்ளார். கம்பீரப் பெரும்பாலும் டெக்னிக்கலை பின்பற்ற மாட்டார். ஏனெனில் நீங்கள் டெக்னிக்கல் அளவில் நன்றாக இருப்பதாலேயே விளையாட்டில் இந்த உச்சத்தை தொட்டிருப்பீர்கள். எனவே தந்திரங்கள் அடிப்படையில்தான் கம்பீர் வேலை செய்வார். தங்கள் மீது உறுதியாக இல்லாத வீரர்களிடம் அவர் நம்பிக்கையும் வலுவையும் ஊட்டுவார். 3 மாதங்களுக்கு முன்பாகவே அவர் சுனில் நரைனிடம் பந்து வீச்சில் எதுவும் வேண்டாம், பேட்டிங்கில் வேலை செய்யுங்கள் என்று சொல்லி விட்டார். திறமையானவர் என்று உணர்ந்து விட்டால் அந்த வீரருக்கு கம்பீர் பெரிய ஆதரவு கொடுப்பார். அவரிடம் பயமின்றி வெற்றி பெறுவதை வழக்கமாக வைத்திருக்கும் பயிற்சியாளருக்கு தேவையான அணுகுமுறை உள்ளது" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024