Saturday, September 21, 2024

ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் எத்தனை? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் எத்தனை? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழக அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்கு மேல் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் பொன் பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து 2019-ம் ஆண்டு பதிவுத்துறை துணைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து பொன் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, “ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்தாலும், நீண்டகாலத்துக்கு பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது. எந்த வேலையும் வாங்காமல் 75 சதவீத ஜீவன படி வழங்குவதால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்கிட வேண்டும்” என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பதிவுத்துறை தலைவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது, “துறை ரீதியான விசாரணையை, தமிழக அரசு அரசாணைப்படி ஓராண்டுக்கு மேல் முடிக்காமல், ஐந்து ஆண்டுகளாக பொன் பாண்டியனை பணியிடை நீக்கத்தில் வைத்தது கண்டிக்கத்தக்கது. ஐந்து ஆண்டுகளாக எந்த வேலையும் வாங்காமல், எதிர்மனுதாரருக்கு 75 சதவீத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இதனை குறித்த காலத்தில் விசாரணையை முடிக்காத அதிகாரியிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.

அரசு உத்தரவையும் அமல்படுத்துவதில்லை. நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்துவதில்லை. அதனால் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்காமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்த விவரங்களை இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024