Saturday, September 21, 2024

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது – ஐரோப்பிய யூனியன்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலமாக நேற்று (ஆக. 5) மதியம் டெல்லி வந்தடைந்தார். தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவர் லண்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வங்காள தேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் வங்காள தேச ராணுவம் அங்கு இடைக்கால அரசு அமைக்க உள்ளதாகவும் ராணுவத் தளபதி நேற்று அறிவித்தார். தொடர்ந்து, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த நிலையில் வங்காள தேச நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிவித்துள்ளார். மேலும் ஜூலை 1 முதல் ஆக.,5 வரை கைதான அனைவரையும் விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. காவல் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களின் வீடுகள், இந்து கோவில்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பல கட்டிடங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

வங்காள தேசத்தில் உள்ள இந்துக்கள், தாங்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வங்காள தேசத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாகவும், இந்துக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அங்குள்ள இஸ்கான் கோவில் துறவி ஒருவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபல இந்து இசைக் கலைஞர் ராகுல் ஆனந்தாவின் வீடும் கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்காள தேசத்தில் உள்ள சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாக அந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"மத சிறுபான்மையினர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலை அளிக்கின்றன. அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். வகுப்புவாத வன்முறையை நிராகரிக்க வேண்டும். வங்காள தேச மக்கள் அனைவரின் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என பதிவிடப்பட்டுள்ளது.

pic.twitter.com/XghgkgUdCE

— European Union in Bangladesh (@EUinBangladesh) August 6, 2024

You may also like

© RajTamil Network – 2024