Friday, September 20, 2024

மத்திய அரசைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – வைகோ அறிவிப்பு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 14-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ம.தி.மு.க. சார்பில் வருகிற 14-ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பத்து ஆண்டு காலம் மத்திய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது. 18-வது மக்களவைத் தேர்தல் முடிந்து, தனிப் பெரும்பான்மை பலத்தை இழந்த பா.ஜ.க., கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள மத்திய பா.ஜ.க., அரசு, கடந்த ஜூலை 23-ம்நாள் தாக்கல் செய்த 2024-25-ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கி உள்ளது.

ஆனால், தமிழ்நாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் வைத்த கோரிக்கையை நிராகரித்த மத்திய பா.ஜ.க., அரசு வெறும் 276 கோடி ரூபாய் மட்டுமே அளித்திருக்கிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆகஸ்ட் 14-ம்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு வருவாய் மாவட்டங்களின் தலைநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024